நாகையில் பதற்றம் மீனவர்களிடையே கோஷ்டி மோதல்; 50 பேர் படுகாயம்


நாகையில் பதற்றம் மீனவர்களிடையே கோஷ்டி மோதல்; 50 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Sept 2017 7:30 AM IST (Updated: 3 Sept 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் மீனவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மோட்டர் சைக்கிள்கள், மீன் பிடி வலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

நாகப்பட்டினம்,

கோஷ்டி மோதல் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சான்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன.

நாகை அக்கரைப்பேட்டையில் புதிய துறைமுக மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இதனால் துறைமுகத்தில் மீன் இறக்குவதில் தொழில் போட்டி காரணமாக 2 மீனவ கிராமங்களிடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்துவருகிறது. கோஷ்டி மோதலும் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சினையை தீர்க்க பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. வேலை நிறுத்தத்திலும் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் நாகை பழைய துறைமுகத்தில் மீன் இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து மீன் இறக்குவதில் நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை மீனவ கிராமங்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இதில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் செந்தில், ரெத்தினவேல் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் இந்த கோஷ்டி மோதலில் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் நாகை, திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோஷ்டி மோதலின் போது மோட்டார் சைக்கிள்களும், மீன் பிடி வலைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. 20–க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நாகை கடுவையாற்றில் தூக்கிவீசப்பட்டன.

வேளாங்கண்ணி கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் பெரும்பாலான போலீசார் அங்கு பாதுக்காப்பு பணிக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டபோது குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரே இருந்ததால் மோதலை தடுக்க முடியாமல் போனதாகவும், இதனால் அதிகம் பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் வந்தனர். மேலும் கோஷ்டி மோதலை கட்டுப்படுத்த 100–க்கும் மேற்பட்ட போலீசார் நாகை துறைமுகத்தில் குவிக்கப்பட்டனர். மீனவர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த கோஷ்டி மோதலால் நாகையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

மேலும் பிரச்சினைக்கு காரணமானவர்களையும், தாக்குதலிலும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மீன் பிடி வலைகளுக்கு தீ வைத்தவர்களையும் உடனே கைது செய்ய வலியுறுத்தி மீனவர்கள் சிலர் நாகை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். நாகை 2–வது கடற்கரைச்சாலையில் சிலர் கண்ணாடி துண்டுகளை வீசினர்.

நாகை பப்ளிக் ஆபிஸ் சாலை, கோர்ட்டு வளாகம் அருகிலும் மற்றும் புதிய பஸ் நிலையம் முன்பும் ஏராளமான மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அந்தப்பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story