மாணவி அனிதா தற்கொலை: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என குற்றம்சாட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதனால் பிளஸ்–2 தேர்வில் அதிக கட்ஆப் மதிப்பெண் பெற்று இருந்தபோதிலும், நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாததால் ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாததால் அரியலூர் மாவட்டம் குழுமூர் காலனி தெருவை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு என்று இரு அரசுகளையும் கண்டித்து பல்வேறு கட்சி, அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை ரெயிலடியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் குஷ்தினா தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகி சதீஷ்குமார், மக்கள் கலை இலக்கிய கழக செயலாளர் ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. இந்த தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.