கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர் சாவு
கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் வெங்கடேசன்(வயது 37). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி, வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வெங்கடேசன் தனது நண்பரான கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த நடராஜன்(42) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் பெரியநாயகிஅம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் அம்மனை தரிசித்து விட்டு, மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை வெங்கடேசன் ஓட்டினார்.
கள்ளக்குறிச்சி அடுத்துள்ள நிறைமதி பஸ் நிறுத்தம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், வெங்கடேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் வெங்கடேசன், நடராஜன் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆலத்தூரை குப்புசாமி மகன் சுரேஷ்(32) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். நடராஜன், சுரேஷ் ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, வீடு திரும்பியபோது மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் போலீஸ்காரா பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பலியான வெங்கடேசனுக்கு சூர்யா(33) என்கிற மனைவியும், கல்யாண்(7), ஜனார்த்தனன்(4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.