2025–ம் ஆண்டுக்குள் மணிக்கு 2 கோடியே 9¾ லட்சம் யூனிட் மின்உற்பத்தி அதிகரிக்க திட்டம்
சுரங்கம் மற்றும் அனல் மின் திட்டங்கள் மூலம் வருகிற 2025–ம் ஆண்டுக்குள் மணிக்கு 2 கோடியே 9¾ லட்சம் யூனிட் மின் உற்பத்தி அதிகரிக்க திட்ட செயல்படுத்தப்பட்டு வருவதாக என்.எல்.சி. இந்திய நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி,
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், நவரத்னா தகுதிபெற்றுள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம், தற்போதைய நிலையில் நெய்வேலியில் மூன்று, ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் ஒன்று என மொத்தம் நான்கு திறந்த வெளி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களை செயல்படுத்தி வருகிறது. இச்சுரங்கங்கள் ஆண்டுக்கு 3 கோடியே 6 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. மேலும் நெய்வேலியில் நான்கு, பர்சிங்சரில் ஒன்று என, மணிக்கு சுமார் 32 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் (3240 மெகாவாட்) மின் சக்தி உற்பத்தி செய்யும் 5 அனல் மின் நிலையங்களை இந்நிறுவனம் இயக்கி வருகிறது.
இது தவிர தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் இணைந்து, தூத்துக்குடியில், 1000 மெகாவாட் திறன் கொண்ட நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையத்தையும் இயக்கி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனம், மணிக்கு 43 லட்சத்து 39 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யும் மின்நிலையங்களை இயக்கி வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ரூ. 316 கோடியே 9 லட்சத்தை நிகர லாபமாக பெற்றுள்ளது.
நெய்வேலியில் அமைக்கப்பட்டுவரும் மணிக்கு 10 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல்மின் நிலையத்திற்கு தேவையான இயந்திரங்களை பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் அடுத்தாண்டு (2018) மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமிழகத்தில் 1500 மெகாவாட் திறன்கொண்ட சூரியஒளி மின்நிலையங்களை அமைக்க கோரிய ஒப்பந்தப்புள்ளியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 709 மெகாவாட் திறன்கொண்ட சூரியஒளி மின்நிலையங்கள் அமைக்க ஒதுக்கீடு பெற்றுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதற்கான நிறுவனங்களை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம், நிர்ணயிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் எதிர்காலத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள சுரங்கம் மற்றும் அனல்மின் திட்டங்கள், சூரிய ஒளி மின்திட்டம், காற்றாலை மின்திட்டம் மூலம் வரும் ஆண்டுகளில், மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட உள்ளது. அதாவது தற்போது மணிக்கு 43 லட்சத்து, 39 ஆயிரம் யூனிட்டாக உள்ள மின் உற்பத்தி அளவானது, 2025–ம் ஆண்டிற்குள் மணிக்கு 2 கோடியே 9 லட்சத்து 71 ஆயிரம் யூனிட்டாக (20,971 மெகாவாட்) அதிகரிக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.