அகரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி


அகரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Sept 2017 3:15 AM IST (Updated: 4 Sept 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

அகரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 50 ஆயிரம் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.

அணைக்கட்டு,

வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போய் வேளாண் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். வேர்க்கடலை பயிரிட ஜூன் மாதத்தில் போதிய மழை பெய்யாததால் பெரும்பாலான விவசாயிகள் கவலையில் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதிகளில் இருந்து காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து உத்திர காவேரி ஆற்றில் (அகரம் ஆறு) நேற்று இரவு முதல் கரை புரண்டு ஓடுகிறது. இந்த உத்திர காவேரி ஆறு, அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் வழியாக 35 கிலோ மீட்டர் தூரத்தில் ஓடி, பள்ளிகொண்டா பாலாற்றில் போய் கலக்கிறது.

இந்த உத்திர காவேரி ஆற்றின் கரை ஓரம் உள்ள சுமார் 50 ஆயிரம் விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. கடந்த சில ஆண்டுகளாக குடிநீருக்கு திண்டாடி வந்த அணைக்கட்டு தொகுதி பொதுமக்கள், தற்போது உத்திர காவேரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை மலர் தூவி வரவேற்று மகிழ்ந்தனர்.


Next Story