தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்தது சொகுசு விடுதியில் 9 பேர் மட்டுமே இருப்பதாக தகவல்


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்தது சொகுசு விடுதியில் 9 பேர் மட்டுமே இருப்பதாக தகவல்
x
தினத்தந்தி 4 Sept 2017 6:00 AM IST (Updated: 4 Sept 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சொகுசு விடுதியில் தங்கியுள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது அங்கு 9 பேர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவை சந்தித்தது. முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்ததை தொடர்ந்து அவருக்கு துணை முதல்–அமைச்சர் பதவியும், மாபா.பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

ஆனால் இதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அவர்களில் வெற்றிவேல் தவிர மற்ற 18 பேர் கடந்த (ஆகஸ்டு) மாதம் 22–ந் தேதி புதுவைக்கு வந்தனர்.

அங்கு கடற்கரையையொட்டிய சின்னவீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கினார்கள். அவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆனது.

இந்த நிலையில் கவர்னரிடம் புகார் தெரிவித்த 19 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கும் நடவடிக்கையாக அவர்கள் மீது அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் செய்து இருந்தார். இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதற்கிடையே வருகிற 12–ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ளார். இதையொட்டியும், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கவர்னரை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையிலும் மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்களை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் விடுதி அறையிலேயே தங்கி இருந்து வந்தநிலையில் சோர்வடைந்தனர். எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி, உமாமகேஸ்வரி, சுந்தர்ராஜ் ஆகியோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்த டி.டி.வி.தினகரன் சொகுசு விடுதிக்கு சென்று எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார். அவர் வந்து சென்றபின் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக இரவோடு இரவாக அறையை காலி செய்ய தொடங்கினார்கள்.

இறுதியாக தற்போது செந்தில் பாலாஜி, பழனியப்பன், எஸ்.டி.கே.ஜக்கையன், ஏழுமலை, சுப்ரமணி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும் விரைவில் காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் அறையை காலி செய்துவிட்டு சென்றுள்ளதால் சொகுசு ஓட்டல் பகுதியில் அவர்களது ஆதரவாளர்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.


Next Story