நதிகள் இணைப்புக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும் தேவேகவுடா பேச்சு


நதிகள் இணைப்புக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும் தேவேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 4 Sept 2017 3:00 AM IST (Updated: 4 Sept 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

நதிகள் இணைப்புக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

நதிகள் இணைப்புக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தேவேகவுடா கூறினார்.

பிரதமர் பதவியில் அமர்ந்தேன்

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநாடு சித்ரதுர்கா மாவட்டம் பரசுராம்புராவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:–

நதிகள் இணைப்பு எப்படி சாத்தியம் என்று பேசும்போது, இருக்கும் ஆதங்கங்களை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். நதிகள் இணைப்புக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். 286 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு மோடி பிரதமராகியுள்ளார். நான் வெறும் 16 எம்.பி.க்களை கொண்டு பிரதமர் பதவியில் அமர்ந்தேன்.

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கியது

மோடியின் நதிகள் இணைப்பு திட்டத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமோ இல்லையோ தெரியவில்லை. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் குமாரசாமி இஸ்ரேல் நாட்டுக்கு சென்று வந்துள்ளார். வரும் காலத்தில் கர்நாடகத்தின் முதல்–மந்திரியாக குமாரசாமி தேர்ந்து எடுக்கப்பட்டால், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை அவர் அமல்படுத்துவார்.

முன்பு நான் சித்ரதுர்காவுக்கு வந்தபோது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி உள்பட 7 தாலுகா பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் நமது கட்சி வெற்றி பெற்றது. சல்லகெரே தொகுதியில் நமது கட்சியை வெற்றி பெற வைப்பதாக நிர்வாகிகள் என்னிடம் உறுதி அளித்துள்ளனர். இந்த சல்லகெரே தொகுதியை இட ஒதுக்கீட்டின் கீழ் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கியது நான் தான்.

நான் ஒப்புக்கொள்ளவில்லை

சிறிய சமுதாயத்தினர் படும் துன்பங்களை நான் புரிந்து கொண்டுள்ளேன். நமக்கு இறைவன் கொடுத்த நீர் உரிமையை பெறுவது வேண்டியது, நமது கடமை. நான் நீண்ட காலமாக போராடி வருகிறேன். வரும் நாட்களிலும் இந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க நான் தொடர்ந்து போராடுவேன். தேவராஜ் அர்ஸ் முதல்–மந்திரியாக இருந்தபோது, இந்திரா காந்தி என்னை அழைத்து, முதல்–மந்திரி பதவியை வழங்குவதாக கூறினார். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.

மாநிலத்தின் நலனுக்காக குமாரசாமியை முதல்–மந்திரி ஆக்குவது அவசியம். மக்கள் அவரை முதல்–மந்திரி பதவியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாநில அரசு விவசாயிகளின் பக்கத்தில் இல்லை என்பதை நான் வேதனையுடன் குறிப்பிடுகிறேன். விவசாய பயிர்கள் கருகிவிட்டன. அதற்கு தேவையான இழப்பீட்டை சித்தராமையா அரசு வழங்கவில்லை.

வேதனையாக உள்ளது

குமாரசாமியை முதல்–மந்திரி ஆக்குங்கள் என்று நான் கேட்கவில்லை. மக்களே அவரை முதல்–மந்திரி பதவியில் அமர்த்துவார்கள். எச்.விஸ்வநாத் நீண்ட காலம் காங்கிரசில் இருந்தார். ஆனால் அவரையே அந்த கட்சி வெளியேற்றிவிட்டது. அவரை கையை பிடித்து ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு அழைத்து வந்துள்ளேன். உன்சூர் தொகுதியில் அவரை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்.

ஏனென்றால் நான் அரசியலில் சிறிய, சிறிய சமுதாயங்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கி இருக்கிறேன். எனது பெயரில் கவுடா என்ற பெயரை சேர்த்துக் கொண்டேன். ஆனால் நான் ஒரு சாதிக்கும் மட்டும் சேர்ந்தவன் அல்ல. மங்களூருவில் நடைபெறும் கலவரங்களை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சகோதரர்களாக வாழ வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.


Next Story