கம்பம் அருகே மதுபான பார் அமைப்பதை தடுக்க வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை


கம்பம் அருகே மதுபான பார் அமைப்பதை தடுக்க வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Sept 2017 4:15 AM IST (Updated: 5 Sept 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் தனியார் மதுபான பார் அமைப்பதை தடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் வெங்கடாசலத்தை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

காமயகவுண்டன்பட்டி கிராமம், கம்பத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சுருளி அருவிக்கு செல்லும் பாதையிலும் அமைந்து உள்ளது. இந்த கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடந்து வருவது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருந்தோம். அப்போது அதிகாரிகள் உரிய தடுப்பு நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது, காமயகவுண்டன்பட்டியில் அனைத்து சமுதானத்தினரும் வழிபடும் கோவில் அருகில் மீண்டும் தனியார் மதுபான பார் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனை தனியார் மதுபான பாரும், சட்டவிரோத மதுவிற்பனையையும் நடத்த ஆயத்த வேலைகள் நடந்து வருகிறது.

இங்கு மதுபான கடைகள், பார் அமைக்கும் முயற்சியை நிரந்தரமாக தடுக்க வேண்டும். காலதாமதம் செய்தால் கிராம பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை, ரே‌ஷன்கார்டு, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு, கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் வருகிற உள்ளாட்சி சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

இந்த மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story