முகத்தில் மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ரூ.1¼ லட்சம் கொள்ளை
திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களின் முகத்தில் மிளகாய் பொடியை தூவியும், கத்தியால் குத்தியும் ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னிவாடி,
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே கோனூர் பிரிவு என்னுமிடத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது. இந்த கடையில் விற்பனையாளராக அழகர்சிங்கம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உதவியாளராக சஞ்சீவி என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கடையை பூட்டி விட்டு ஜெயக்குமாரும், சஞ்சீவியும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மதுபானம் விற்பனை செய்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை ஜெயக்குமார் வைத்திருந்தார். திண்டுக்கல்லை அடுத்துள்ள முத்தனம்பட்டி என்னுமிடத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தனர். பின்னர் அவர்கள் ஜெயக்குமார், சஞ்சீவி ஆகியோருடைய முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். பின்பு தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவர்களை குத்த முயன்றனர். இதனை தடுத்தபோது அவர்களது கையில் காயம் ஏற்பட்டது.
இதனால் நிலைகுலைந்து 2 பேரும் கீழே விழுந்தனர். அதற்குள் அந்த கும்பல், ஜெயக்குமார் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து கன்னிவாடி போலீசில் ஜெயக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.