கட்டிடத்தொழிலாளி கொலையில் அண்ணன்–தம்பி உள்பட 6 பேர் கைது
திண்டுக்கல்லில் நடந்த கட்டிடத்தொழிலாளி கொலையில் அண்ணன்–தம்பி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி மகன் சூசைஆரோக்கியராஜா (வயது 27). கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் மீன் வாங்க சென்றபோது, வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. அவர் மருத்துவமனை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இது குறித்து, திண்டுக்கல் தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தோமாஸ் மகன் ஜார்ஜ் (28) மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
ஜார்ஜ், சூசைஆரோக்கியராஜா ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள், தங்கையை திருமணம் செய்திருந்தனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஒரு திருமண விழாவின்போது, 2 பேரும் ஏற்கனவே மோதிக்கொண்டனர்.
அதன்பிறகு, ஜார்ஜ் வீடு இருந்த பகுதிக்கு சென்ற சூசைஆரோக்கியராஜா, அவருடைய மோட்டார் சைக்கிளின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக ஜார்ஜ் கருதினார். இதனால், அவர் தன்னை கொலை செய்வதற்கு முன்பு சூசைஆரோக்கியராஜாவை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்கான சதி திட்டத்தை அவருடைய அண்ணன் பிரான்சிஸ் (34) என்பவர் வகுத்துக்கொடுத்தார். அந்த திட்டத்தின்படி, ஜார்ஜ், பிரான்சிஸ், அவர்களின் உறவினர்கள் அருள்தாஸ் (28), வினோத்குமார் (23), ஆரோக்கியதாஸ் (24), 18 வயது நிரம்பாத சிறுவன் ஆகியோர் சேர்ந்து சூசைஆரோக்கியராஜாவை கொலை செய்தனர். மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையொட்டி 6 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களில் பிரான்சிசுக்கு கையில் காயம் இருந்ததால், அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. மற்ற 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 3 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.