வீடுகளை அகற்ற எதிர்ப்பு காஞ்சீபுரத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்


வீடுகளை அகற்ற எதிர்ப்பு காஞ்சீபுரத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 5 Sept 2017 4:00 AM IST (Updated: 5 Sept 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வேகவதி நதிக் கரையோரம் உள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் அருகே பொதுமக்கள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வேகவதி நதிக்கரையோரம் தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நதிக்கரையோரம் உள்ள வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வேகவதி நதிக்கரையோரம் உள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி குடியிருப்போர் கூட்டமைப்பினர் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. விஸ்வநாதன், கூட்டமைப்பின் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பின்னர் இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளதாவது:-

காஞ்சீபுரம் வேகவதி நதிக்கரையோரம் குடியிருக்கும் ஆயிரத்து 418 வீடுகளுக்கு பாதிப்பின்றி வேகவதி கரையில் தடுப்பு சுவர் அமைப்பது குறித்தும், எவ்வளவு அகலம் அமைப்பது என்பது குறித்தும் கலெக்டர் முன்னிலையில் தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேகவதி நதிக்கரையோரம் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கி அப்பகுதி மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ளனர்.
தற்போது வேகவதி நதியை மறு அளவீடு செய்த அடிப்படையில் காஞ்சீபுரம் காவலான் கேட் பகுதியில் இருந்து திருப்பருத்திக்குன்றம் வரை 30 மீட்டர் அகலமும், காவலான் கேட் கிழக்கு பகுதி முதல் கணேஷ் நகர் வரை 20 மீட்டர் அகலம் என்ற அளவில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story