மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதை கண்டித்து டி.டி.வி. தினகரனின் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தை நீக்கி நேற்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.
இதை கண்டித்து நேற்று மாலை விழுப்புரம் காந்தி சிலை அருகில் கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு, நகரமன்ற முன்னாள் கவுன்சிலர் வண்டிமேடு ராமதாஸ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் டி.டி.வி. தினகரனின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பசுபதி, ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், வேலு, விழுப்புரம் நகரமன்ற முன்னாள் கவுன்சிலர்கள் வக்கீல் செந்தில், வரதராஜபெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் ரகுநாதன், முன்னாள் இணை செயலாளர் அசோக்குமார், கோலியனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்டமானடி ராஜி, ஊராட்சி செயலாளர் என்ஜினீயர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் திண்டிவனத்தில் நகர செயலாளர் வக்கீல் தீனதயாளன் தலைமையில் அ.தி.மு.க.வினர் டி.டி.வி.தினகரனின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார், தேவநாதன் மற்றும் தளபதி ரவி, சேகர், முருகன், அப்பாஸ்மந்திரி, சந்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.