மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2017 4:30 AM IST (Updated: 5 Sept 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் சாவுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை ரத்த செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சியினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் நேற்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழக மாணவர்களும் போராட்டம் செய்தனர். காலை 9 மணிக்கு மாணவ, மாணவிகள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள பூமாகோவில் அருகே ஒன்று திரண்டனர்.

தொடர்ந்து மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் அனைவரும் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

இதை தொடர்ந்து 10 மணிக்கு மாணவ, மாணவிகள் அனைவரும் ஊர்வலமாக பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு வந்து, அமர்ந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அவர்கள் ‘நீட்’ விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, மாணவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்யும் வகையில் போலீஸ் வாகனம் பல்கலைக்கழகத்தின் உள்ளே நுழைய முயன்றது. இந்நிலையில் அங்கு சாலையில் அமர்ந்திருந்த மாணவர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்து வாகனத்தை பின்னோக்கி எடுத்து சென்றனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அவர்களது போராட்டம் தொடர்ந்து நீடித்தது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தும், அதை பொருட்படுத்திக்கொள்ளாமல் ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு நுழைவு வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவ–மாணவிகளின் நலன் கருதி நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினர். போராட்டம் நடத்திய மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து அவர்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியை சேர்ந்த வரலாற்றுத்துறை மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து, முட்டி போட்டு கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கல்லூரியில் இருந்து மெயின் ரோடு வரை மாணவ, மாணவிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அமைதி ஊர்வலம் நடத்தினர்.

இதேபோன்று சிதம்பரம் ராகவேந்திரா கலைக்கல்லூரி, சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் செய்தனர்.


Next Story