நாகையில் மீனவர்களிடையே மோதல்: விடிய, விடிய சாலைமறியலில் ஈடுபட்ட 509 பேர் கைது


நாகையில் மீனவர்களிடையே மோதல்: விடிய, விடிய சாலைமறியலில் ஈடுபட்ட 509 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2017 7:45 AM IST (Updated: 5 Sept 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் விடிய, விடிய சாலை மறியலில் ஈடுபட்ட 135 பெண்கள் உள்பட 509 பேரை போலீசார் கைது செய்தனர். பதற்றமான சூழ்நிலையால் கடைகள் அடைக்கப்பட்டன.

நாகப்பட்டினம்,

நாகை அக்கரைப்பேட்டையில் புதிய துறைமுக மீன்பிடி இறங்குதளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்த மீன்பிடி இறங்குதளத்தில் மீன் இறக்குவதில் தொழில்போட்டி காரணமாக 2 கிராம மீனவர்களிடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் 2 கிராமங்களிடையே அதிகாரிகள் முன்னிலையில் பலத்தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் இதில் சுமுக தீர்வு எட்டப்படாமல் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் மாலை நாகை பழைய துறைமுகத்தில் மீன் இறக்குவதற்காக நம்பியார்நகர் மீனவர்கள் மீன் இறங்கு தளத்தை சுத்தம் செய்துள்ளனர். அப்போது நம்பியார்நகர் மீனவர்களுக்கும், அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது இரு கிராமங்களுக்கிடையே பெரும் மோதலாக மாறியது. இதில் நம்பியார்நகரை சேர்ந்த சுமார் 25–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இரு கிராமங்களுக்கிடையே பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜ் மேற்பார்வையில், தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோரது தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பியார்நகர் மீனவர்கள் திடீரென நாகை அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், கோர்ட்டு அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மயில்வாகனன், தேஷ்முக்சேகர் சஞ்சய் மற்றும் போலீசார் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும்வரை சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று மீனவர்கள் கூறினர். இதையடுத்து சாலைமறியல் விடிய, விடிய தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் மீனவர்கள் சாலை மறியலை கைவிடாததால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் பள்ளி குழந்தைகள் 5 பேரையும் வேனில் ஏற்றினர். இதில் 135 பெண்கள் உள்பட 509 பேரை போலீசார் கைது செய்து கீழையூர், திருமணங்குடி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. மேலும் இந்த சம்பவத்தால் நாகையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், இரு தரப்பினரிடையே மோதல் சம்பந்தமாக அக்கரைப்பேட்டையை சேர்ந்த 23 பேர், நம்பியார்நகரை சேர்ந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை பாராளுமன்ற உறுப்பினர் கோபால், தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உள்பட அதிகாரிகள் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை பார்த்து ஆறுதல் கூறினர்.


Next Story