“அழியும் நதிகளை மீட்காவிட்டால் தேசத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது” ஜக்கி வாசுதேவ் பேச்சு
‘‘அழியும் நதிகளை மீட்காவிட்டால் தேசத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது’’ என்று ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி,
வறண்டு வரும் நதிகளை காப்பாற்றி, அதன் நீரோட்டத்தை அதிகரிக்க ஈஷா யோகா மையம் சார்பில் ‘நதிகளை மீட்போம்’ என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.
பேரணியின் தொடக்க விழா நேற்று முன்தினம் கோவையில் நடந்தது. இதில் பங்கேற்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் பேசினார். இந்த விழிப்புணர்வு பிரசார பயணம் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது.
பிறகு விவேகானந்தபுர கடற்கரை வளாகத்தில் பிரசார பயணம் குறித்த நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகை சுகாசினி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:–
நாடு முழுவதும் எல்லோரும் நதிகளை மீட்கும் பணியில் ஈடுபடுவதற்கு தற்போது ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். நமது நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 45 நாட்கள் தான் மழை என்று உள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடத்துக்கு 250 நாட்கள் மழை பொழிகிறது.
இது தெரியாமல் நதியை பாதுகாப்பது தொடர்பாக அமெரிக்காவில் பின்பற்றும் முறையையே இங்கேயும் பின்பற்றுகிறார்கள். இது சரியான முறை இல்லை. இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது நாட்டில் ஒரு பக்கம் வெள்ளம், ஒரு பக்கம் வறட்சியாக உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையை எதிர்கால சந்ததியினர் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றே தெரியவில்லை. நதிகளுக்கு மூலாதாரமான காட்டையே நாம் அழித்து விட்டோம். காடுகள் இருக்கும் போது 12 மாதங்களும் நதிகளில் தண்ணீர் ஓடியது.
கடந்த 12 வருடத்தில் நமது நாட்டில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். இது சாதாரண விஷயமல்ல. மண்வளம், நீர்வளம் இல்லாததால் இந்த துயர முடிவை எடுத்துள்ளனர். அது போன்று இனி இருக்கக்கூடாது.
முன்னேற்றத்துக்கு தேவையான செயல்களில் ஈடுபட வேண்டும். வளமான மண் பாலைவனமாக போய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அழிந்து வரும் நதிகளை மீட்கவில்லை என்றால் தேசத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது ‘‘வளமான மண்ணுக்கு தேவையான தண்ணீர் இல்லையென்றால் நாடு, நாடாக இருக்காது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் நதிகளை இணைக்க முடியும். நதிகளை இணைப்பது தொடர்பான பயணம் 16 மாநிலங்களை கடந்து செல்கிறது. நதிகள் இணைப்பிற்கு நாம் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மக்கள் இந்த பயணத்தில் அதிகமாக ஈடுபட வேண்டும். 125 கோடி மக்களில், 20 முதல் 50 கோடி மக்கள் இந்த பயணத்தில் ஈடுபட்டால், நதிகளை மீட்பதற்கு மத்திய–மாநில அரசுகளுக்கு தைரியம் வரும். நதிகளை இணைப்பதற்கு பொருளாதார செலவு அதிகம் இல்லை. அறிவும், மண் வளமுமே தேவை’’ என்றார்.