ரோடியர் மில் திடலில் இரவில் மாணவர்கள் திடீர் போராட்டம் 50-க்கும் மேற்பட்டவர்கள் குண்டுக்கட்டாக கைது


ரோடியர் மில் திடலில் இரவில் மாணவர்கள் திடீர் போராட்டம் 50-க்கும் மேற்பட்டவர்கள் குண்டுக்கட்டாக கைது
x
தினத்தந்தி 5 Sept 2017 6:30 AM IST (Updated: 5 Sept 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

ரோடியர் மில் திடலில் இரவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

புதுச்சேரி,

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும் மத்திய அரசை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக புதுவை ரோடியர் மில் திடலில் நேற்று இரவு 7 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் திடலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடம், போலீசார் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்கள். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். அதையடுத்து மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர்.

இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் சிலர் மறைத்து வைத்திருந்த பினாயில் பாட்டில் எடுத்து அதனை குடிக்க முயன்றனர். இதை எதிர்பாராத போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த பினாயில் பாட்டிலை பறித்தனர். ரோடியர் மில் திடலில் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் கல்வித்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது மாணவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை எனத்தெரிகிறது. அனுமதியின்றி கூடியதாக மாணவர்கள் மீது கல்வி துறை சார்பில் போலீசில் புகாரும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரோடியர் மில் திடலில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதேபோல் கண்ணீர் புகை குண்டு தயார் நிலையில் இருந்தது. பின்னர் அங்கு போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி வந்து, மாணவர்களை கலைந்து செல்லும்படி கூறினார். உரிய அனுமதி பெற்று போராட்டங்களை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

அங்கிருந்து வெளியேற மாணவர்கள் தொடர்ந்து மறுத்தனர். மீண்டும் மீண்டும் மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகும் மாணவர்கள் வெளியேற மறுத்ததால் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து போலீஸ் பஸ்சில் ஏற்றினார்கள். அப்போது அந்த பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story