பலத்த மழையால் நொய்யல் ஆற்றில் சாய கழிவுகளை திறந்து விட்டதால் நிறம் மாறி சென்ற வெள்ளம்
பலத்த மழையால் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் திறந்து விடப்பட்டன. இதையடுத்து நொய்யல் ஆற்றின் வெள்ளம் நிறம்மாறி சென்றது. இதனால் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முத்தூர்,
கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர் வழியாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் வழியாக கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையத்தில் அணை கட்டப்பட்டுள்ளது.
நொய்யல் ஆறு என்று கூறினாலே சாயக்கழிவு ஆறு என்று கூறும் அளவிற்கு இந்த ஆற்றில் செல்லும் நீரில் ஏராளமான சாயக்கழிவுகள் கலந்து சென்றன. இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நகர கிராமப்பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், ஓடைகள், ஏரிகள் உட்பட நீர் நிலைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த நொய்யல் பாசன விவசாயிகள் திருப்பூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த சாயத்தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்றும், சாயக்கழிவு நீரினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விளை நிலங்களுக்கு நஷ்ட ஈட்டுத்தொகை வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு, திருப்பூர் மாநகர, சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வந்த அனைத்து சாய தொழிற்சாலைகளிலும் சுத்திகரிப்பு கருவி பொருத்தி சாயக்கழிவுகளை நன்கு சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படாத சாயத்தொழிற்சாலைகளை ‘சீல்‘ வைக்க வேண்டும் என்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருப்பூரில் சுத்திகரிப்பு கருவி பொருத்தாத ஏராளமான சாயத்தொழிற்சாலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய பருவமழை பெய்யாததால் நொய்யல் ஆற்றில் குறைந்த அளவே நீரே சென்றது. அதன் பின்பு கடும் வறட்சியினால் நொய்யல் ஆறு வறண்ட நிலையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று காலை முதல் நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மழை நீர் கரைபுரண்டு ஓடியது. முதலில் மழை நீர் மட்டும் சென்றதால் ஆற்றில் செல்லும் தண்ணீர் செந்நிறமாக சென்றது. இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அறிந்த திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் தேக்கி வைத்திருந்த சாயக்கழிவுகளை நேற்று மதியத்திற்கு மேல் திறந்து நொய்யல் ஆற்றில் கலந்து விட்டனர். இதனால் மாலை 4 மணிக்கு மேல் நொய்யல் ஆற்றில் செல்லும் மழை நீரில் சாயக்கழிவுகள் அதிக அளவு கலந்த நிலையில் கருப்பு நிறத்தில் நுரை தள்ளியபடி ஒருவித துர்நாற்றத்துடன் சென்றது.
இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் மற்றும் நகர, கிராமப்பகுதிகளில் குடிநீர் ஆதாரங்களில் மீண்டும் சாயக்கழிவுகள் கலந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை திறந்து கலக்கும் சாயத்தொழிற்சாலைகளை உடனே கண்டறிந்து அவற்றினை சீல் வைத்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.