மத்திய-மாநில அரசுகளை பிணங்களாக சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்


மத்திய-மாநில அரசுகளை பிணங்களாக சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

மத்திய-மாநில அரசுகளை பிணங்களாக சித்தரித்து நூதன போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும் நீட் தேர்வின் ஆணையின் நகலை எரித்து சாலை மறியல் செய்த இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

அரியலூர் மாணவி அனிதா சாவுக்கான காரணம் குறித்து அறிய விசாரணை குழு அமைக்க வேண்டும், தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும், திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்ட குழுவும் சேர்ந்து திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி எதிரே கடந்த 2-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 4-வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்- இளைஞர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கல்லூரி மாணவர்களான தினேஷ், சூர்யா, சேக், முகேஷ், இளைஞர்கள் ஜீவா, மார்சிங் கார்கி ஆகிய 6 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போராட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கண்களில் கருப்புத்துணி கட்டி கொண்டும், நேற்று வாயில் கருப்புதுணி கட்டிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மத்திய-மாநில அரசுகளை பிணங்களாக சித்தரித்து 2 மாணவர்கள் பிணம் போல் நடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் அவ்வழியாக சென்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கங்கள் வந்து தங்களது ஆதரவை தெரிவித்து செல்கின்றனர்.

இந்நிலையில் அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றத்தின் மாநில செயலாளர் பாலமுருகன் உள்பட 6 பேர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திடீரென்று அரசு மருத்துவ கல்லூரி நுழைவு வாயில் அருகே சென்று மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் நீட் தேர்விற்கான ஆணையின் நகலை எரித்தனர். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று அதனை தடுக்க முயன்றனர். ஆனால் இளைஞர்கள் போலீசாரின் பிடியில் சிக்காமல் ஓடிவந்து சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த 6 இளைஞர்களையும் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அவர்களை கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story