துலாக்கட்டத்தில் நிரந்தரமாக தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை நாகை கலெக்டர் தகவல்


துலாக்கட்டத்தில் நிரந்தரமாக தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை நாகை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:15 AM IST (Updated: 6 Sept 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

காவிரி புஷ்கரம் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நிரந்தரமாக தண்ணீரை தேக்கி வைக்க ரூ.1½ கோடி செலவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழா வருகிற 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் “தினத்தந்தி” நிருபரிடம் கூறியதாவது:-

மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டம் புனிதமானது. இங்கு கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை உள்ளிட்ட 12 நதிகளும் புனித நீராடியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக 11 கிணறுகள் துலா கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒரு கிணறு அங்கு இருந்து இருக்கும். இவை 12 நதிகளுக்கு உரியவை.

காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால் மட்டுமே துலாக் கட்டத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கும். மற்ற நேரங்களில் தண்ணீர் இருக்காது. தற்போது காவிரி புஷ்கரம் விழாவை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் நிரந்தரமாக தண்ணீரை தேக்கி வைப்பதற்காக ரூ.1½ கோடி செலவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. துலாக்கட்டத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் அதன் படித்துறையின் இருபுறத்திலும் நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

உடை மாற்றும் அறை

துலாக்கட்டத்தில் மணல் பரப்பி காவிரி ஆற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து, துலாக்கட்டத்தில் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. 3 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பப்படும். புஷ்கரம் விழாவின்போது பக்தர்கள் படித்துறையில் ஒரு வழியாக இறங்கி சென்று நீராடவும், குளித்து விட்டு மறுவழியாக வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குளித்து முடித்த ஆண், பெண் பக்தர்கள் உடை மாற்றுவதற்கு வசதியாக படித்துறை அருகில் உடை மாற்றும் அறைகள் இருக்கும். மேலும் படித்துறை, காவிரிக்கரை, பஸ் நிலையம் போன்ற இடங்களில் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. வெளியூரில் இருந்து விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தரங்கம்பாடியில் இருந்து வரும் பக்தர்களுக்கு மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மேல்நிலைப்பள்ளி அருகில் ஒரு தற்காலிக பஸ் நிலையமும், சீர்காழி பூம்புகார் பகுதியில் இருந்து வரும் பக்தர்களுக்காக பூம்புகார் ரோட்டில் தற்காலிக பஸ் நிலையமும் அமைக்கப்படுகிறது. விழாவையொட்டி மயிலாடுதுறைக்கு சிறப்பு ரெயில் விடவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

கண்காணிப்பு கோபுரம்

அமைச்சர்கள், சங்கராச்சாரியார்கள், ஆதீனகர்த்தர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தனி வழியாக சென்று துலாக்கட்டத்தில் நீராடுவதற்கும், பொதுமக்கள் மற்றொரு வழியாக சென்று நீராடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 1 மணி நேரத்துக்கு ஒரு முறை துலாக்கட்டத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு புதிதாக தண்ணீர் நிரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, சுகாதார வசதி, 108 ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் எந்த வழியாக துலாக்கட்டத்துக்கு செல்லலாம் என்பது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். முக்கிய பிரமுகர்கள் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படும். புஷ்கரம் விழாவின்போது அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் எந்த இடத்தில் அன்னதானம் வழங்குகிறோம் என்பதை குறிப்பிட்டு முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

மயிலாடுதுறை காவிரி புஷ்கர தீர்த்தம் தபால் துறை மூலம் பக்தர்களுக்கு அனுப்பவும், தடையின்றி மின்சாரம் வழங்கவும், மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story