மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம் மணல் அள்ள அனுமதி வழங்க கோரிக்கை


மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம் மணல் அள்ள அனுமதி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 Sept 2017 4:15 AM IST (Updated: 6 Sept 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

வைப்பாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வலியுறுத்தி, விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளம்,

வைப்பாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வலியுறுத்தி, விளாத்திகுளம் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். அங்கு காத்திருக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலமுருகன், துணை தலைவர் சித்தாண்டி, செயலாளர் தம்பிராஜ், துணை செயலாளர் பொன்ராஜ், ஆலோசகர் புவிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ரவீந்திரன், சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மதியம் தாலுகா அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். மாலையில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. வைப்பாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முருகன், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருகிற 8-ந்தேதி ராமநாதபுரம் உதவி பொறியாளர் (மணல்) ரமேஷ், விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல் உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story