கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி 2 பேர் படுகாயம்


கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்;  வாலிபர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தக்கலை,

அழகியமண்டபம் அருகே உள்ள நெய்யூர் மேல்கரை தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 26), கட்டிட தொழிலாளி. இவர் கேரளாவில் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்காக ஊருக்கு வந்தார்.

இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ரவி, புதுகுளத்தை சேர்ந்த பால்ராஜ் (35). இவர்கள் 3 பேரும் நேற்று குமாரகோவிலில் சாமி கும்பிடுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பால்ராஜ் ஓட்டி சென்றார். தினேசும், ரவியும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

இவர்கள் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் சென்ற போது, முதியவர் ஒருவர் திடீரென சாலையை கடப்பதற்காக குறுக்கே வந்தார். அப்போது, பால்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக முதியவர் மீது மோதியது. அத்துடன், அது நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது தினேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவரது நண்பர்கள் பால்ராஜ், ரவி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும், சாலையை கடக்க முயன்ற முதியவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story