மங்களூருவுக்கு தடையை மீறி மோட்டார்சைக்கிள் பேரணி பெங்களூருவில் பா.ஜனதா தலைவர்கள் கைது


மங்களூருவுக்கு தடையை மீறி மோட்டார்சைக்கிள் பேரணி பெங்களூருவில் பா.ஜனதா தலைவர்கள் கைது
x
தினத்தந்தி 6 Sept 2017 5:30 AM IST (Updated: 6 Sept 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி மங்களூருவுக்கு மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல முயன்ற பா.ஜனதா தலைவர்கள், இளைஞர் அணியினர் பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டனர். அப்போது தள்ளுமுள்ளு-வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு மோட்டார்சைக்கிளில் பேரணியாக செல்லும் மங்களூரு சலோ போராட்டம் பா.ஜனதா சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கர்நாடக பா.ஜனதா இளைஞரணி சார்பில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலையில் தொடர்பு உடைய முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும், வனத்துறை மந்திரியும், தட்சிண கன்னட மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ரமாநாத்ராய் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதனை வலியுறுத்தி ‘மங்களூரு சலோ‘ என்ற பெயரில் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு மோட்டார் சைக்கிள் பேரணி 5-ந் தேதி (நேற்று) பெங்களூருவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆயிரக்கணக்கானவர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக மங்களூரு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

இந்த பேரணிக்கு அனுமதி வழங்குமாறு அக்கட்சியின் இளைஞரணி சார்பில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமாரிடம் மனு வழங்கப்பட்டது. இதற்கிடையே போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டியை பா.ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து, பேரணிக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று மந்திரி கூறினார். இந்தநிலையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கூறி பேரணிக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி மறுத்துவிட்டார். மேலும் சுதந்திர பூங்காவை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறும் என்று பா.ஜனதாவின் இளைஞரணி அறிவித்தது. அதன்படி நேற்று காலை மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழாவுக்காக பெங்களூரு சுதந்திர பூங்காவில் பா.ஜனதா தலைவர்கள் ஒவ்வொருவராக வந்த வண்ணம் இருந்தனர். முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், ஷோபா எம்.பி., முன்னாள் மந்திரி சோமண்ணா, எம்.எல்.ஏ.க்கள் சதீஸ்ரெட்டி, ரவிசுப்பிரமணியா மற்றும் பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக கூடியது. அங்கு தடை உத்தரவில் அமலில் இருந்ததால் முன்கூட்டியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தடையை மீறி அவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்க தயாராயினர். அக்கட்சியின் இளைஞர் அணியினர் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில் ஏற்றினர். அப்போது கர்நாடக அரசை கண்டித்து அவர்கள் குரலை உயர்த்தியும், கைகளை நீட்டியும் ஆவேசமாக முழக்கமிட்டனர். அவர்களை கைது செய்தபோது போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் அங்கு ஒரு பதற்றமான சூழல் நிலவியது.

இதை கண்டித்து பா.ஜனதா தலைவர்கள் ஆர்.அசோக், ஷோபா உள்ளிட்டோர் சுதந்திர பூங்கா முன்பு உள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியல் செய்தனர். இதில் அக்கட்சியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். இதையடுத்து ஆர்.அசோக் உள்பட மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக ஆர்.அசோக் போலீசாருடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்போது, “எங்கள் கட்சியினர் வரும் மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா? என்று நீங்கள்(போலீசார்) கேட்கிறீர்கள். மேலும் கைது செய்கிறீர்கள். உங்களிடம் கைது வாரண்டு உள்ளதா?“ என்று ஆவேசமாக கூறினார். பெங்களூருவில் மட்டும் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மைசூரு ரோட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு நோக்கி வரும் பா.ஜனதாவினரை தடுக்க நகரில் முக்கியமான சந்திப்புகளில் போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டனர். போலீசாரின் கண்களில் இருந்து தப்பிக்க பா.ஜனதாவினர் வண்டிகளில் கட்சி கொடியை கட்டாமல் பொதுமக்களை போல் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவ்வாறு ஆனேக்கல் பகுதியில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின்போது ஷோபா எம்.பி., கால் தவறி கீழே சரிந்து விழுந்தார் இதில் அவருடைய காலில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் அக்கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளர் அரவிந்த்ரெட்டிக்கும் காயம் ஏற்பட்டது.

சுதந்திர பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பா.ஜனதாவினரின் மோட்டார் சைக்கிள்களை போலீசார், மீட்பு வாகனத்தில்(‘டோவிங்‘) ஏற்றி சென்றனர். மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி நிராகரித்த மாநில அரசை கண்டித்து பெலகாவி, கோலார், உப்பள்ளி-தார்வார் உள்பட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் பா.ஜனதாவினர் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜனதாவினரின் மோட்டார் சைக்கிள் பேரணியை எடியூரப்பா தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி நிராகரித்துவிட்டனர். இந்த பேரணியை தடுக்கும் விதமாக பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள எடியூரப்பா வீட்டு முன்பு நேற்று காலையிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பேரணிக்கு அனுமதி இல்லை என்பதால், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவரிடம் போலீசார் எச்சரித்தனர். வெளியே வந்தால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்றும் போலீசார் கூறினர். இதனால் அவர் வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க நேர்ந்தது.

Next Story