அரசு பஸ்சில் 20 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
அரசு பஸ்சில் 20 கிலோ கஞ்சா கடத்திய உசிலம்பட்டியை சேர்ந்த 2 வாலிபர்களை மண்டபத்தில் போலீசார் கைது செய்தனர்.
பனைக்குளம்,
மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வரும் அரசு பஸ்சில் மண்டபம் பகுதிக்கு கஞ்சா கடத்தி வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் தனிப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் தலைமையில் தனிப்பரிவு காவலர் சுரேஷ் உள்ளிட்ட போலீசார் மண்டபம் பஸ்நிறுத்தம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்த ஒரு அரசு பஸ் மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது 3 பெரிய பைகளுடன் இறங்கி சென்ற 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பேலீசார் கஞ்சாவை கடத்தி வந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (வயது29), வெள்ளைபாண்டி (30) ஆகிய 2 பேரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், உசிலம்பட்டியை சேர்ந்த முத்துப்பிள்ளை என்ற பெண் கஞ்சாவை மண்டபத்தில் கொண்டு வந்து தருமாறு தெரிவித்ததாகவும், அவரும் உடன் வந்து தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.