வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கண்ணக்குடி வட்டாரத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கண்ணக்குடி வட்டாரத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Sept 2017 4:30 AM IST (Updated: 7 Sept 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

கண்ணங்குடி வட்டாரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லதா ஆய்வு மேற்கொண்டார்.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ளது கண்ணங்குடி. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, குடிநீர் திட்டங்கள், வேளாண்மை துறை திட்டம், கண்மாய், ஊருணிகளில் தூர்வாருதல் உள்ளிட்டவை குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் சென்று அங்குள்ள ரேசன் கடைகள், பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் லதா ஆய்வு செய்தார்.

கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தானூர் ஊராட்சியில் பிரதான சாலையில் இருந்து குறிச்சிவயல் வரை செல்லும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் லதா நேரடியாக ஆய்வு செய்து, பருவமழை காலம் தொடங்க உள்ளதால் சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் கண்ணங்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், ஊராட்சி ஒன்றிய மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அனுமந்தக்குடி ரேசன் கடையில் ஆய்வு செய்து அரிசி, சீனி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்று அங்கிருந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் கண்ணங்குடி தொடக்கப்பள்ளி சத்துணவு மையம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story