பகிர்மான குழாய் பதிப்பதில் தாமதம் குடிநீர் வினியோகம் பாதிப்பு; நகராட்சி அலுவலகம் முற்றுகை


பகிர்மான குழாய் பதிப்பதில் தாமதம் குடிநீர் வினியோகம் பாதிப்பு; நகராட்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 7 Sept 2017 4:30 AM IST (Updated: 7 Sept 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் குடிநீர் பகிர்மான குழாய் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விருதுநகர், 

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் குடிநீர் பகிர்மான குழாய் பதிப்பதற்கு ரூ.60 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டது. ஒருவருடத்துக்கு மேல் ஆகியும் குழாய் பதிப்பதில் நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டாததால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்ட பின்னர் நகராட்சி நிர்வாகம் பகிர்மான குழாய் பதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் பாத்திமாநகர் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது. அப்பகுதி மக்கள் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விருதுநகரை பொறுத்தமட்டில் பல்வேறு பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு ராமமூர்த்தி ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி வழியாகத்தான் குடிநீர் செல்ல வேண்டி உள்ளது. எனவே அப்பகுதியில் பகிர்மான குழாய் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நகர் முழுவதும் பரவலாகவே குடிநீர் விநியோகம் தடைப்படுகிறது.

நேற்று பாத்திமாநகர் பகுதி பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகரசபை உதவி என்ஜினீயர் முருகேசன் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக குடிநீர் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்ததின் பேரில் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story