எண்ணூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
எண்ணூர்–கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மதுக்கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது கல்வீசிய 4 பேர் பிடிபட்டனர்.
திருவொற்றியூர்,
எண்ணூர்–கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் கடந்த 3–ந் தேதி புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டது. குடியிருப்பு நிறைந்த பகுதியில் மதுக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடை முன் திரண்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மதுக்கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த மதுக்கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் நகராட்சி தலைவர் திருசங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்பு செழியன் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டு கடையை திறக்கக்கூடாது என்று கூறி மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் எண்ணூர்–கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது மதுக்கடை பார் ஊழியர்கள் மாடியில் இருந்து கற்களை வீசி தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாடிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த 4 பேரை பிடித்தனர். பின்னர் அவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பெண்கள் மதுக்கடை மீது கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் தலைமையில் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பகுதியில் மதுக்கடை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.