நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஊர்வலம்–ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி தேனி அருகே வீரபாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவ கனவு நிறைவேறாததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த கல்லூரி வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. அங்கிருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீரபாண்டி போலீஸ் நிலையம் அருகில் வந்தனர்.
பின்னர் அங்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாகராஜ், கிளை நிர்வாகி உதயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர், அதே பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதேபோன்று, தமிழ்மாநில பெண்கள் இயக்கம் சார்பில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தேனி பங்களாமேடு பகுதியில் கையெழுத்து பிரசாரம் நடத்தப்பட்டது. இதில், ‘கல்வித்தரம் போதவில்லை என்றால் யார் பொறுப்பு? அரசா? மாணவர்களா? இனி ஒரு இறப்பு நடந்திடாமல் தவிர்ப்பது அரசின் கடமை’ என்ற வாசகத்தோடு அமைக்கப்பட்ட பேனரில் பொதுமக்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டது. இந்த பிரசாரத்துக்கு தமிழ்மாநில பெண்கள் இயக்க தலைவி அருள்மொழி தலைமை தாங்கினார். இதில் பெண்கள் அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.