கிண்டியில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதல்; 2 பேர் காயம் கார் டிரைவர் கைது


கிண்டியில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதல்; 2 பேர் காயம் கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2017 4:30 AM IST (Updated: 7 Sept 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

கிண்டியில் 108 ஆம்புலன்ஸ் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

அரியலூரை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 30). இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். நேற்று காலை காந்தி மண்டபத்தில் இருந்து இவர் அடையாறு நோக்கி ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்தார். ஆம்புலன்சில் உதவியாளர் இஜேந்திரா என்பவர் உடன் இருந்தார்.
கிண்டி சர்தார் பட்டேல் ரோட்டில் ஆம்புலன்ஸ் சென்ற போது, எதிரே வந்த கார் ஒன்று ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆம்புலன்சில் இருந்த பிரித்திவிராஜ் மற்றும் இஜேந்திரா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் மூலம் இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவர் ஆதித்தியாராஜன் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்த துர்கா (22) ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 50 அடி குடிநீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்வதாக மிரட்டியவரை போலீசார் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

* கொடுங்கையூரை சேர்ந்த ரெயில்வே ஊழியரான ராமு (53) பணி முடிந்து பெரம்பூர் கேரேஜ் ரெயில்வே பணிமனையில் இருந்து வெளியே வந்தபோது அரக்கோணத்தில் இருந்து சென்னை வந்த மின்சார ரெயில் மோதியதில் இறந்தார்.

* வில்லிவாக்கம்-கொரட்டூர் இடையே நேற்று மாலை சென்னையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்தார். அவர் யார்? என போலீசார் விசாரிக்கிறார்கள்.

* ஒட்டேரி அரசு மதுபான கடையில் பாரில் வேலை பார்த்து வந்த அரியலூரை சேர்ந்த சரவணன் (23) ஊருக்கு செல்வதற்காக ஸ்டாரன்ஸ் ரோட்டில் வந்தபோது மாநகர பஸ் மோதியதில் இறந்தார்.

* அம்பத்தூர் ராம்நகர் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருள் விற்பனை கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம மனிதர்கள் அங்கு இருந்த லாக்கரை உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி சென்றனர்.

* கொருக்குப்பேட்டை காமராஜ்நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருளான மாவாவை தயாரித்ததாக சந்திரசேகர் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்து 100 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது.

* ஆதம்பாக்கம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த தேவி (42) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

* சிட்லபாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (20) கடந்த திங்கட்கிழமை மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றபோது கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். இந்த நிலையில் அவரது உடல் நேற்று தேவனேரி பகுதியில் கரை ஒதுங்கியது.

Next Story