குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நெருக்கடி கொடுப்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க, இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:–
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா விவசாயத்தையும், தொழிலையும் இரு கண்களாக பாவித்தார். எந்த ஒரு நாட்டில் தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கின்றதோ அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னுக்கு வரும். எனவே தமிழகத்தை தொழிற்சாலை வளமிக்க மாநிலமாக உருவாக்க வேண்டுமென்று அவர் எண்ணினார். சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, அதில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இதுபோல் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வெற்றி காணப்பட்டு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.
நிலத்தடி நீர் தான் விவசாயிகளுக்கு பிரதானம். ஒரு மனிதனுக்கு உயிர் எப்படியோ அதுபோல நிலத்தடி நீர் இருக்கின்றது. நிலத்தடி நீரை உயர்த்தவேண்டும் என்பதற்காக ஆங்காங்கே இருக்கின்ற ஓடைகள், ஆறுகளில் தடுப்பணை கட்டி மழைநீரை தேக்கிவைப்பதற்காக மூன்றாண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தியது அவரது அரசு.
அவருடைய ஆட்சிகாலம்தான் விவசாயிகளுக்கு பொற்காலமாக இருந்தது. 2011–2012–ஆம் ஆண்டில் இரண்டாம் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 2011–ஆம் ஆண்டு முதல் 2016–ஆம் ஆண்டு வரை, 4 முறை, 100 லட்சம் டன்னுக்கும் அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து தமிழ்நாடு உயரிய சாதனை படைத்துள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில், 4 முறை ‘க்ரிஷி கர்மாண்’ என்ற உயரிய விருதினை தமிழகம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னை விவசாயிகள் பயன்பெற நீராபானம் தயாரிப்பதற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தென்னை விவசாயிகளுடைய வருமானம் கூடுதலாகும். தமிழகத்தில், இன்றைக்கு பருவமழை பொய்த்துவிட்டதன் காரணமாக, 140 ஆண்டுகாலம் இல்லாத கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள், குளங்களிலே போதிய நீர் இல்லை. குடிப்பதற்குக்கூட நீர் இல்லை. சில இடங்களில் 1000 அடி ஆழத்திலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த மாவட்டம் கால்வாய் பாய்கின்ற மாவட்டம். ஆகவே, பாசனம் பெறுகின்ற பகுதிகளில் எல்லாம் தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 247 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,882 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கின்ற விவசாயிகளுக்கும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இயற்கை மரணம் அடையும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.10 ஆயிரம் என்பது ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்தரத்தைக் கொண்டுதான் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. எனவே பள்ளிக்கல்வித் துறைக்கு முன்னுரிமை கொடுத்து 2017–2018–ஆம் ஆண்டிற்கு ரூ.26 ஆயிரத்து 932 கோடியே 31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களும் கணினி அறிவு பெற உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.438 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் தொடங்கவும், ரூ.60 கோடியில் நடுநிலை பள்ளிகளுக்கு அறிவுத்திறன் வகுப்பறைகள் உருவாக்கவும், ரூ.391 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 6 ஆண்டுகளில் 39 ஆயிரத்து 412 ஆசிரியர் பணிநியமனங்களும், 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 169 பகுதிநேர ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 227 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. 116 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு நலத்திட்டங்கள், அளித்ததன் விளைவாக, தொடக்க நிலை கல்வியில் மாணவர் சேர்க்கை 99.85 சதவீதமாகவும், நடுநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை 99.20 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. உயர்கல்வி படிக்கின்றவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டு காலத்தில் 65 கல்லூரிகளை ஜெயலலிதா உருவாக்கினார். 2011–ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது 100–க்கு 21 சதவீதம் பேர் உயர்கல்வி படித்தார்கள். ஆனால், இன்று உயர்கல்வி படிப்பவர்கள் 100–க்கு 44.3 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக்கூடியவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ஆண்டு 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. கோபியில் ஒரு கல்லூரி இந்த ஆண்டு திறக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை போல, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைக் குடும்பத்தினருக்கு 2015–2016–ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை ரூ.11 ஆயிரத்து 457 கோடி செலவில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 717 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. எம்.ஜி.ஆர் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் தான் கோவை மாவட்டத்தைப் பிரித்து, ஈரோடு மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அவர் ஆட்சியின்போது இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். அதேபோல, இந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உழைப்பாளிகள். பிரதான தொழிலாக இருப்பது விவசாயம், ஜவுளித் தொழில். ஆக, 2 தொழில்களும் செழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டம் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டுகிறேன்.
ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான சோலார் பகுதியில் புறநகர் பஸ்நிலையம் அமைக்க அரசால் பரிசீலிக்கப்படும்.
அம்மாவினுடைய ஆட்சி தொடரவேண்டும். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க, சிலர் இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கப் பார்க்கின்றார்கள். அம்மாவின் ஆன்மா அவர்களை சும்மா விடாது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கின்றார்கள். அத்தனைபேரும் சிப்பாய்களாக இருக்கின்றார்கள். இந்த தொண்டர் பலம் இருக்கின்ற, வலிமை சேர்க்கின்ற இயக்கமாக இந்த இயக்கம் இருக்கின்றது. இந்த எக்கு கோட்டையை எவராலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. ஜெயலலிதாவின் இந்த அரசு மக்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்ற அரசாக இருக்கும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.