நெல்லையில், பலத்த மழை சந்திப்பு பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கியது
நெல்லையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சந்திப்பு பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கியது.
நெல்லை,
தமிழகத்தில் வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், நெல்லை மாவட்டத்தில் வறட்சியே நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து, கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி சென்று விடுகிறது.
இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் நெல்லையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 4.30 மணி அளவில் கருமேகங்கள் ஒன்று கூடி, வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த 6 மணி வரை தொடர்ந்து பலத்த மழையாக பெய்தது.
இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலைய பகுதி, பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியில் மழை தண்ணீர் தேங்கி சூழ்ந்தது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கும் வகையில் குழாய்கள் பொருத்தப்பட்டன. ஆனால் தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால், நேற்று பெய்த மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் பஸ் நிலைய பகுதியில் தேங்கி நின்றது. இதனால் சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற பஸ்கள் மற்றும் அந்த ரெயில் நிலையத்தில் பஸ் நிலைய ரோடு வழியாக சென்ற வாகனங்களும் தண்ணீரில் தத்தளித்து சென்றன. நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறைக்கு செல்லும் சாலைத்தெரு தொடக்கத்தில் மழை நீர் வடிந்து செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி நின்றது.
இதே போல் நெல்லையில் வண்ணார்பேட்டை, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. பாளையங்கோட்டை வ.உ.சி. திடல் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.