அனிதா சாவுக்கு நீதி கேட்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்த போவதாக தகவல்: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


அனிதா சாவுக்கு நீதி கேட்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்த போவதாக தகவல்: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 6 Sep 2017 11:15 PM GMT (Updated: 6 Sep 2017 8:46 PM GMT)

மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த போவதாக வந்த தகவலை அடுத்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கடலூர்,

நீட் தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாணவர்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நரசிம்மன், சுந்தரவடிவேலு ஆகியோர் மேற்பார்வையில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இது தவிர தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் சில்வர் பீச்சில் திரண்டு உண்ணாவிரத போராட்டம் ஏதும் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அங்கும் திரளான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கும்பலாக சென்ற மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி வந்தனர்.

அதேபோல் கடலூர் அரசு பெரியார் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, கந்தசாமிநாயுடு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டு வெளியே வர முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து, கல்லூரி வளாகத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்கு சென்று விட்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களை ஒன்று திரட்டிய அமைப்பினர் மீண்டும் அதேபோல் அனிதா சாவுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளையும் கண்காணித்து வருகின்றனர்.


Next Story