‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூர், சிதம்பரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூர், சிதம்பரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:00 AM IST (Updated: 7 Sept 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

நீட்’தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூர், சிதம்பரம் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

‘நீட்’ தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 3–வது நாளாக மாணவ– மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

பின்னர் அவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதாவின் சாவுக்கு நீதிக்கேட்டும் அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் கீழமூங்கிலடியில் உள்ள தனியார் கல்லூரி மாணவ–மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதிக்கேட்டும் சிதம்பரம் புறவழிச்சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் கிள்ளை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு மாணவ–மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் நேற்று 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் கோ‌ஷமிட்டனர்.

நெய்வேலி 14–வது வட்டத்தில் உள்ள ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி வாசலில் இருந்து புதுக்குப்பம் ரவுண்டானா வழியாக பேரணியாக சென்று மெயின் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்து சென்றனர். கடலூர் பகுதியில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகளிலும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story