மாஞ்சோலை செல்லும் சாலையை சீரமைத்து தரவேண்டும் கலெக்டரிடம், பா.ஜனதாவினர் மனு
மாஞ்சோலை செல்லும் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு செல்கின்ற சாலை மோசமாக உள்ளதால் அங்கு செல்கின்ற அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை என்று கூறி அந்த பகுதி மக்கள் ஏற்கனவே பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மாஞ்சோலை பகுதி மக்கள் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தயாசங்கர், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், மாஞ்சோலை எஸ்டேட்டிற்கு செல்லும் வழிதடத்தில் மணிமுத்தாறு சோதனை சாவடியில் இருந்து சாலைகள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி ஆகிய பகுதிகளுக்கு தோட்ட தொழிலாளர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் செல்லமுடியாதநிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்கவேண்டும். சாலை மோசமான நிலையில் உள்ளதால் குதிரைவெட்டி, மாஞ்சோலை பகுதிக்கு சென்ற அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே சாலையை உடனே சீரமைத்து வழக்கம் போல் பஸ்களை இயக்கவேண்டும். குதிரைவெட்டியில் இருந்து அம்பை வரை இயக்குகின்ற பஸ்சை நெல்லை வரை இயக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.
அம்பை நகரசபையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், சாக்கடையை சுத்தம் செய்யும்போது எங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.