புதுக்கோட்டையில் வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் உள்ள ஆவணங்களை சோதனை செய்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் உள்ள ஆவணங்களை சோதனை செய்தனர். இதில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை அழைத்து வருதல், குடிபோதையில் வாகனங்களை ஓட்டியவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்கள், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள் போன்ற பல்வேறு சாலை விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலீசார் ஒரு சிலரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையின்படி சம்பந்தப்பட்டவர்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில் ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் 3 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்தனர். இதைபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 279 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்ட வாகன ஓட்டிகள் நேற்று மாலை புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து தங்களது ஓட்டுனர் உரிமத்தை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.