நெல்லை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தொடரும் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
ராதாபுரம்,
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் எழுச்சி பெற்று உள்ளது. நெல்லை மாவட்டத்திலும் மாணவ–மாணவிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ராதாபுரம் தேரடி அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தாலுகா தலைவர் ரஜினி தலைமை தாங்கினார். செயலாளர் முகம்மது பயாஸ் வரவேற்றார். முன்னாள் செயலாளர் மாயகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ராதாபுரம் தாலுகா செயலாளர் கல்யாணி ஆகியோர் பேசினர். ஜனநாயக மாதர் சங்கம் கீதா, வாலிபர் சங்க நிர்வாகிகள் முத்துகுமார், அய்யப்பன், மகேஷ், சி.ஐ.டி.யு. நிர்வாகி ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாலுகா துணை செயலாளர் அஜேஷ்குமார் நன்றி கூறினார்.
மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சுரண்டை அரசு கலை கல்லூரியிலும் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.