அனிதா சாவுக்கு நீதி விசாரணை கேட்டு மோடி, எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணசாமி உருவபொம்மைகளை தூக்கிலிட்டு போராட்டம்


அனிதா சாவுக்கு நீதி விசாரணை கேட்டு மோடி, எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணசாமி உருவபொம்மைகளை தூக்கிலிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2017 10:45 PM GMT (Updated: 6 Sep 2017 9:48 PM GMT)

அனிதா சாவுக்கு நீதி விசாரணை கேட்டு மோடி, எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணசாமி உருவபொம்மைகளை தூக்கிலிட்டு போராட்டம் நடத்திய 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

நீட் தேர்வினை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி விசாரணை கேட்டும், பிரதமர் மோடி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரின் உருவபொம்மையை தூக்கில் தொங்கவிடும் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் வக்கீல் பொன்முருகேசன் தலைமையில் கோர்ட்டு அருகே திரண்ட நிர்வாகிகள், 3 பேரின் உருவபொம்மைகளையும் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்டபடி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இது பற்றி முன்பே அறிந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடி சென்று உருவபொம்மைகளை பறித்தனர். உடனே அவர்கள் மோடி, எடப்பாடி, கிருஷ்ணசாமி ஆகியோரின் உருவபடங்களை ‘தீ‘ வைத்து எரித்தனர். பாதி எரிந்த நிலையில் அதையும் போலீசார் பறித்தனர். பின்னர் அவர்கள் அதே இடத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இது பற்றி வக்கீல் பொன்.முருகேசன் கூறுகையில், “தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் ‘நீட்‘ தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனிதா சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் மோடி தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோடியின் கைப்பாவையாக இருக்கிறார். மாணவி அனிதாவின் மரணத்தை டாக்டர் கிருஷ்ணசாமி கொச்சைப்படுத்தி வருகிறார். ஆகவே இவர்கள் 3 பேரையும் கண்டித்து போராட்டம் நடத்தினோம்“ என்றார். கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story