மாணவி அனிதா சாவு குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்


மாணவி அனிதா சாவு குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:30 AM IST (Updated: 7 Sept 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா சாவு குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சையிலும் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை சரபோஜி கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா, மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாகவும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை ரெயில் நிலையம் முன்பு தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்து சாலை ஓரத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன், சரபோஜி கல்லூரி மாணவர் பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் தஞ்சையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீட்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆனஸ்ட்ராஜ், பிடல் காஸ்ட்ரோ, வீரையன், தீபா, மாதவன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள நா.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் இருந்து வெண்ணாற்றங்கரை வரை ஊர்வலகமாக சென்று பின்னர் மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் நல கூட்டமைப்பினர் சீமான் இளையராஜா தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஊர்வலமாக சென்று பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story