நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2017 4:30 AM IST (Updated: 7 Sept 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் பரிசல்கள் இயக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

பென்னாகரம்,

தமிழக- கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நேற்று முன்தினம் காலை நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 12 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் களமழை பெய்ததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததால் பரிசல்களை இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 6-வது நாளாக நீட்டிக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளிப்பதை சுற்றுலா பயணிகள் தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள்.

ஒகேனக்கல்லுக்கு நேற்று திரண்டு வந்த சுற்றுலா பயணிகளில் பலர் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவியில் கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் தொங்கு பாலத்திற்கு சென்று ஒகேனக்கல்லின் இயற்கை அழகை ரசித்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவை மத்திய நீர்வளத்துறையினர் அளவீடு செய்து தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story