பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர் ‘திடீர்’ போராட்டம் கொளத்தூர் அருகே பரபரப்பு
கொளத்தூர் அருகே ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொளத்தூர்,
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கத்திரிப்பட்டி கிராமம். தமிழக வன எல்லையொட்டி உள்ள இந்த கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் 7 ஆசிரியர்களுக்கு பதிலாக 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக கூறி, அந்த மாணவர்களின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வேறு பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் தற்காலிகமாக இந்த பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அவ்வாறு மாற்றப்பட்ட ஆசிரியர்களும் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளுக்கு சில தினங்களுக்கு முன்பு திரும்பியதால் மீண்டும் அந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பள்ளி வகுப்பறைகள் மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் வசந்தா, பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற 11–ந் தேதிக்குள் இந்த பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நிரப்புவதாக பெற்றோர்களிடம் அவர் உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) முதல் மீண்டும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். போராட்டத்தை விலக்கி கொண்டாலும் வருகிற 11–ந் தேதிக்குள் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் தமிழக அரசு தங்களது குழந்தைகளுக்கு வழங்கிய சீருடை மற்றும் நலத்திட்ட பொருட்களை மீண்டும் தமிழக அரசிடம் ஒப்படைப்போம் என்று, கல்வித்துறை அதிகாரியிடம் பெற்றோர் தெரிவித்தனர்.
பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்திய சம்பவம் கொளத்தூர் அருகே திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.