மாணவர்கள் கட்டுப்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
மாணவர்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வடமாதிமங்கலத்தில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி ஜெகன்நாதன் பேசினார்.
போளூர்,
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான ஜி.மகிழேந்தி வழிகாட்டுதலின்படி போளூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் வடமாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வடமாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.முருகன் வரவேற்றார்.
வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான வே.ஜெகன்நாதன் தலைமை தாங்கி பேசியதாவது:–
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகள் தங்களை தாழ்மையாக எண்ணாமல் குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களது பொறுப்பை உணர்ந்து படிக்க வேண்டும். நானும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் தான். படிக்கும் காலத்தில் பள்ளியில் வழங்கிய சத்துணவை சாப்பிட்டுதான் பள்ளி படிப்பை தொடர்ந்தேன்.
அரசு சட்டக்கல்லூரியில் படித்து நீதிபதியாக பணியாற்றி வருகிறேன். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். சாதி, மொழி ரீதியிலான அமைப்புகளில் மாணவர்கள் ஈடுபடுவது அவரவர் விருப்பம். ஆனால் மாணவர்களான உங்களுக்கு இவை தேவைதானா? என்பதை புரிந்து செயல்படவேண்டும்.மாணவர்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணங்கள் உயர்வானதாக இருந்தால் வாழ்க்கை உயர்வடையும். பள்ளி முடிந்து மாணவிகள் வீட்டிற்கு செல்லும் போது யாராவது பின்தொடர்ந்து வந்தால், அல்லது தொல்லை கொடுத்தால் தலைமை ஆசிரியரிடமோ, பெற்றோர்களிடமோ அல்லது காவல்துறை அதிகாரிகளிடமோ தெரிவிக்க வேண்டும். தெரியாதவர்கள் யாராவது நம்மை தொட்டு பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து மாணவ– மாணவிகளுக்கு மோட்டார் வாகன விபத்து, ராக்கிங், சைபர் கிரைம் குறித்த சட்டங்களை விளக்கி கூறினார்.
முகாமில் உதவி தலைமை ஆசிரியர் பழனி, தீனதயாளன், அரசு வக்கீல் என்.சரவணன், வழக்கறிஞர் சங்க செயலாளர் பெ.நாகராஜன், ஒய்.பி.கண்ணன், ஜஹாங்கீர், பன்னீர்செல்வம், அனிதா, பார்த்திபன், லிங்கேசன், முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை நன்றி கூறினார்.