பழைய அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பலர் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் சாலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்ட பின்னர் முக்கிய சிகிச்சைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் தற்போது பழைய அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற நோயாளிகள் அனைவரும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் நகரின் முக்கிய இடத்தில் இருக்கும் இந்த மருத்துவமனைக்கு அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்றும், தரம் உயர்த்த வேண்டும் என்றும் பொதுமக்களும், பக்தர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி பழைய அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு கலெக்டர் உங்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.