ஏலகிரிமலையில் பாறைகள் சாலையில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஏலகிரிமலை சாலையில் பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரிமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை காரணமாக ஏலகிரிமலை செல்லும் கொண்டை ஊசி சாலைகளான 3, 5, 7, 9 ஆகிய வளைவுகளில் 7 இடங்களில் பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்துள்ளது. அதேபோல் ஒரு இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் இரவு முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் திருலோகசுந்தரம் ஆகியோர் தலைமையில், சாலை ஆய்வாளர் ஏசுநாதன் மற்றும் சாலை பணியாளர்கள் நேற்று காலை 11 மணி அளவில் ஏலகிரிமலை சாலைக்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் ஒரு பக்கம் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக சீர் செய்தனர்.இதையடுத்து மாலை 4 மணியளவில் முற்றிலும் பாறைகள், மரங்களை அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர்.
இதனால் ஏலகிரிமலைக்கு செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story