வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்


வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Sep 2017 11:09 PM GMT (Updated: 2017-09-07T04:39:14+05:30)

நீட் தேர்வு எதிரொலியாக வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூரில் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. 1918–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி அடுத்த வருடம் 100–வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மருத்துவ கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை படிப்பில் 100 மாணவ– மாணவிகளும், முதுகலை பிரிவில் 61 பேரும் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்காக சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வு நடத்தி அதில் தேர்ச்சிபெறும் மாணவ– மாணவிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேர இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் தனியாக தேர்வு நடத்தும். அதில் தேர்ச்சிபெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி சேர்க்க அனுமதிகோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:–

நீட்தேர்வு நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றாலும், சி.எம்.சி. நிர்வாகம் தனியாக தேர்வு நடத்தும், அதில் தேர்ச்சிபெறும் மாணவ– மாணவிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.

சி.எம்.சி.க்கு என்று தனிக்கொள்கை உள்ளது. அந்த கொள்கைக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். அதாவது சமூக அக்கறை, குழுவாக பணியாற்றும் பண்பு, கிராமங்களுக்கு சென்று சேவை செய்பவர்களாக இருக்கவேண்டும். இதுபோன்று எங்கள் கொள்கைக்கு உட்பட்டவர்களுக்கே மருத்துவ படிப்பில் இடம் வழங்கப்படும்.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில் அடுத்தமாதம் (அக்டோபர்) 11–ந் தேதி தீர்ப்பு வருகிறது. இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.Next Story