பா.ஜனதாவினரின் மோட்டார் சைக்கிள் பேரணி: தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
பா.ஜனதாவினரின் மோட்டார் சைக்கிள் பேரணியின் எதிரொலியாக தட்சண கன்னடா மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மங்களூரு,
பா.ஜனதாவினரின் மோட்டார் சைக்கிள் பேரணியின் எதிரொலியாக தட்சண கன்னடா மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் டி.ஆர்.சுரேஷ் தெரிவித்தார்.
கர்நாடக பா.ஜனதா இளைஞரணி சார்பில், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரத் மடிவாளா கொலையில் தொடர்புடையவர் இருந்து வரும் முஸ்லிம் அமைப்பை தடை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மங்களூருவுக்கு ‘மங்களூரு சலோ‘ என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் டி.ஆர்.சுரேஷ் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவது தொடர்பான முழுமையான தகவல்களை வழங்கினால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். தடையை மீறி பா.ஜனதாவினர் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார். ஆனாலும் போலீசாரின் தடையை மீறி பா.ஜனதாவினர் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாமல் தடுக்கவும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும் தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் டி.ஆர்.சுரேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–தட்சண கன்னடா மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். அதிவிரைவுப்படை, ஆயுதப்படை, கர்நாடக போலீஸ் சிறப்பு படை உள்பட 1000–க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் தற்போது அதற்கான அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
தட்சிண கன்னடா மாவட்ட எல்லைப்பகுதிகளான முகவீரபட்டணா, கோட்டிபுரா, கோடி, தொக்கொட்டு சந்திப்பு, குந்தாப்புரா உள்பட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக வருபவர்களை தடுக்கவே எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா இளைஞரணி தலைவர் ஹரீஸ் புஞ்சா நிருபர்களிடம் கூறியதாவது:–நாங்கள் நடத்த இருந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை. விரைவில் தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அதில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். திட்டமிட்டபடி எங்களின் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நேற்று மதிய வேளையில் மங்களூருவில் போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். இதனால் மங்களூரு நகரமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுபோல் காட்சி அளித்தது.