பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை: அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவு


பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை: அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 7 Sept 2017 5:24 AM IST (Updated: 7 Sept 2017 5:24 AM IST)
t-max-icont-min-icon

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த கவுரி லங்கேஷ்(வயது55) நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் ‘லங்கேஷ் பத்திரிகே‘ என்ற வாரப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். முற்போக்கு சிந்தனையாளரான இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், கவுரி லங்கேஷ் கொலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி, கர்நாடக அரசின் தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு இதுபற்றி விவரங்களை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளார். கொலை நடந்தது பற்றியும், கொலையாளிகளை பிடிக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரங்களை கர்நாடக அரசு தாக்கல் செய்ய உள்ளது.

Next Story