அசல் ஓட்டுனர் உரிமம் பிரச்சினையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி
அசல் ஓட்டுனர் உரிமம் பிரச்சினையால் ஆட்டோ டிரைவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் மீட்டனர்.
ஆலந்தூர்,
சென்னை திருவான்மியூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 46). ஆட்டோ டிரைவர். தற்போது அசல் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டக்கூடாது என அரசு அறிவித்து உள்ளது. ஆனால், முத்துக்குமாரிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாததால் ஆட்டோவை அதன் உரிமையாளர் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அசல் ஓட்டுனர் உரிமம் பெற முத்துக்குமார், திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கு முறையாக தகவல் தரப்படவில்லை என்றும், தரகர்கள் மூலமாக தான் அணுக வேண்டும் என கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனால் கடந்த ஒரு வாரமாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்று வந்த முத்துக்குமார் நேற்று காலை மீண்டும் அங்கு சென்றார். திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்ட அவர், அலுவலகத்தின் வாசலில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினார். பின்னர் தீப்பெட்டியை பற்ற வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது கையில் இருந்த தீப்பெட்டி கீழே விழுந்துவிட்டது. உடனே அங்கிருந்தவர்கள், அவரை கீழே இறங்கி வரும்படி கூறி சத்தம் போட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார், செல்போன் கோபுரத்தில் ஏறி, ஆட்டோ டிரைவர் முத்துக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவரை பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், பின்னர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.