வீட்டில் சிறை வைத்து சித்ரவதை சென்னையில் இருந்து, பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்


வீட்டில் சிறை வைத்து சித்ரவதை சென்னையில் இருந்து, பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 8 Sept 2017 5:15 AM IST (Updated: 8 Sept 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை ஆரணிக்கு கடத்திச் சென்று வீட்டில் சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதை செய்ததாக அரசு டாக்டர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வங்கி ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்யும் ஒருவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 9-ம் வகுப்பு படிக்கிறாள். 2-வது மகள் விடுதி ஒன்றில் தங்கி 5-ம் வகுப்பு படிக்கிறாள். எனது மூத்த மகள் திடீரென்று காணாமல் போய்விட்டாள். கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காணாமல் போய் ஒரு மாதம் கழித்து எனது மகள் அலங்கோலமான முறையில் வீடு திரும்பினாள்.

திரும்பி வந்த எனது மகள் சொன்ன தகவல் எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. எங்கள் குடும்பத்தோடு நெருக்கமாக பழகிவந்த பெண் ஒருவர் எனது மகளை கடத்திச் சென்றிருக்கிறார். ஆம்புலன்சு வேனில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு கடத்திச் சென்று அங்குள்ள ஒரு வீட்டில் சிறை வைத்துள்ளனர்.

ஆரணியில் உள்ள நகைக்கடையில் வேலை வாங்கி தருவதாக எனது மகளுக்கு ஆசைகாட்டி உள்ளனர். அவளுக்கு மயக்க ஊசி போட்டு ஆரணியைச் சேர்ந்த அரசு டாக்டர் ஒருவரும், மேலும் 2 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பல ஆண்களின் காமப்பசிக்கும் எனது மகளை பலியாக்கி இருக்கிறார்கள். எப்படியோ அந்த கும்பலிடம் இருந்து எனது மகள் தப்பி வந்திருக்கிறாள். விபசார கும்பலிடம் எனது மகளை விற்பதற்கும் முயற்சி நடந்துள்ளது.

எனது மகளின் வாழ்க்கையை சீரழித்த அரசு டாக்டர் உள்ளிட்டவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கும்பலால் எனது மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story