‘நீட்’ தேர்வுக்கு கடும் எதிர்ப்பு: கடலூரில் மாணவர்கள் போராட்டம்; கல்வீச்சு- பஸ் கண்ணாடி உடைப்பு


‘நீட்’ தேர்வுக்கு கடும் எதிர்ப்பு: கடலூரில் மாணவர்கள் போராட்டம்; கல்வீச்சு- பஸ் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 8 Sept 2017 5:00 AM IST (Updated: 8 Sept 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராக கடலூரில் மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு நடந்தது. பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து தனியார் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

கடலூர்,

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கல்லூரியை விட்டு வெளியே போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.

ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வெளியே விடவில்லை. இதையடுத்து நுழைவு வாயில் அருகில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘நீட்’ தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, கோஷங்களை எழுப்பியபடி கல்லூரிக்குள் சென்றனர். அப்போது சில மாணவர்கள், அங்கிருந்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நோக்கி கற்களை வீசினர். மின் விளக்குகளை கல்வீசி உடைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிலைமை மோசமாவதை தடுக்க, மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து பெரும்பாலான மாணவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். ஒரு சிலர் விடுமுறை அறிவித்தும் கலைந்து செல்லாமல் நுழைவு வாயில் அருகில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கல்லூரி வளாகத்தில் அந்த நிர்வாகத்துக்கு சொந்தமான பள்ளிக்கூட பஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடியை சில மாணவர்கள் கட்டையால் அடித்து உடைத்தனர். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது.

அதன்பிறகும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் கோஷங்களை எழுப்பியபடி நின்றனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் கடலூர் செம்மண்டலத்தில் தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
அப்போது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசுவதற்காக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் 4 பேர் கல்லூரிக்குள் செல்ல முற்பட்டனர்.

ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நிர்வாகி ஒருவரை போலீசார் வாகனத்தில் ஏற்றி புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் கல்லூரி மாணவிகளின் போராட்டம் தொடர்ந்தது.

மதியம் கல்லூரி மாணவிகள் சிலர் வெளியே வந்து கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியல் செய்வதற்காக வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை விடவில்லை. இதையடுத்து மீண்டும் அந்த மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் செம்மண்டலம் தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் மதியம் வரை நடைபெற்றது. அதன்பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

கடலூர் பீச் ரோட்டில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த வெளியே வந்தனர். இது பற்றி அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமையிலான போலீசார் அந்த மாணவர்களை வெளியே வரவிடாமல் தடுத்து உள்ளே அனுப்பினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தாமல் தங்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story