மாவட்டத்தில் 3 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 358 பேர் கைது


மாவட்டத்தில் 3 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 358 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கடலூர் மாவட்டத்தில் 3 இடங் களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 358 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்திற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முதல் இவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கடலூர் மாவட்டத்திலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் இளங்கோவன், அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பழனி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஜெகநாதன், வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

உடன் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதில் மொத்தம் 44 பெண்கள் உள்பட 95 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சிதம்பரத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அனைவரும் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் 71 பெண்கள் உள்பட 125 பேர் கைதானார்கள். இவர்கள் அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் இளஞ்செழியன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மன்ற பொருளாளர் வாசுதேவன், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர் காவிய செல்வன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்குமரன், அரசு ஊழியர் சங்க உறுப்பினர் தமிழ்செல்வன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் செய்தனர். இதில் 62 பெண்கள் உள்பட 138 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 177 பெண்கள் உள்பட 358 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் ஏற்றட்ட பிளவு காரணமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு சில சங்கங்கள் பங்கேற்கவில்லை. இருப்பினும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், தாலுகா, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. குறைந்த அளவு ஊழியர்களே பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் ஆசிரியர்களும் பணிக்கு செல்லாததால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.


Next Story