பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை


பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Sept 2017 9:00 AM IST (Updated: 8 Sept 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

சோமனூரில் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவையை அடுத்த சோமனூரில் பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் அரசு பஸ் கண்டக்டர் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். அரசு பஸ் டிரைவர்கள் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கோர சம்பவத்தில் பலியான 5 பேரின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்.

தற்போது இடிந்து விழுந்துள்ள சோமனூர் பஸ் நிலையம் கடந்த 1998-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது. 18 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காமல் இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து பொதுமக்களின் உயிரைப்பறித்துள்ளது.

எனவே, இந்த கட்டிடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது தான் இதுபோன்ற தரமற்ற கட்டிடங்களைக் அரசு ஒப்பந்ததாரர்கள் கட்டமாட்டார்கள்.

மேலும் சோமனூர் பஸ் நிலையம் அருகில் உள்ள வேளாண்மைத் துறைக்குச் சொந்தமான கட்டிடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மாவட்டத்தில் தரமற்றக் கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்றவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story